தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுகவில் மீண்டும் இணைய சசிகலாவின் முயற்சி தோல்வி

2 mins read
9d9a215f-af05-41e7-9205-96655b5ce54f
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்த்தால் குழப்பம்தான் வரும். எனவே அவர்களை சேர்க்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறிவிட்டார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: பிளவுபட்டிருந்த அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளதால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த ஆதரவாளர்களின் கட்சி செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது.

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம் மற்றும் இரட்டை இலை சின்னம் திரு பழனிசாமி வசம் உள்ளதால் கட்சி ரீதியான செயல்பாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகின்றன.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த திரு பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்ததை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துவிட்டது. இதனால் திரு பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் வலுவாகிவிட்டது.

அதிமுகவை பொறுத்தவரை திமுகதான் அதன் முதல் எதிரி. திமுக செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதுடன் அதை விமர்சனம் செய்வது, போராட்டம் நடத்துவது ஆகியவற்றில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரைச் சந்தித்து முறையிடுவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது ஆகியவற்றிலும் திரு பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் முன்னின்று நடத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் ஓ.பன்னீர்செல்வத்தால் நடத்த முடியவில்லை. இதனால் அவருடைய ஆதரவாளர்கள் சோர்வடைய தொடங்கிவிட்டனர். இனி எதிர்காலம் என்னவாகும் என்ற விரக்தியில் அவர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, அதிமுகவில் திரு பன்னீர்செல்வத்தின் ஆட்களை களையெடுக்கவும் அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்சியில் செயல்படாத சில மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவும் திரு பழனிசாமி பட்டியல் தயாரித்து வருகிறார்.

அதிமுகவில் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடந்து வருவதால், அந்தப் பணி முடிந்ததும் கட்சி பொறுப்புகளுக்கு புதிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். திரு பழனிசாமியின் செயல்பாடுகளைப் பார்த்து பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் வேடிக்கை பார்க்கும் அளவுக்கு நிலைமை சென்றுவிட்டது.

அதிமுகவை ஒருங்கிணைத்து ஓரணியாக செயல்பட வைக்க வேண்டும் என்று பாஜக எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும் அது தோல்வியில் முடிந்துவிட்டது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, நட்டா பழனிசாமியிடம் எவ்வளவோ பேசியும் அதற்கு பழனிசாமி சம்மதிக்கவில்லை. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கட்சியில் சேர்த்தால் குழப்பம்தான் வரும். எனவே அவர்களை சேர்க்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தனது பலத்தைக் காட்டும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்