சென்னை: தமிழக ஆளுநர் ஆர். என். ரவி வெள்ளிக்கிழமையன்று இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு நான்கு நாள் பயணம் மேற்கொண்டார். சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு விமானத்தில் டெல்லி புறப்பட்ட திரு ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சு அதிகாரிகள் ஆகியோரைச் சந்திக்கவிருப்பதாக நம்பப்படுகிறது.
அங்கு தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதம் 27ஆம் தேதியன்று திரு ரவி சென்னை திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று திரு செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்த திரு ரவி, அமைச்சரவையில் திரு செந்தில் பாலாஜி தொடர எதிர்ப்பு தெரிவித்திருந்தார். எனினும், இலாக்கா இல்லாத அமைச்சராக திரு செந்தில் பாலாஜி நீடிப்பார் என்று அறிவித்து தமிழக அரசு, அரசாணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

