மதுரை: குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக மதுரை காவல்துறை புதிய கணினிச் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்குப் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
உலகளவில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் கோவிலைச் சுற்றி அமைந்துள்ள தங்கு விடுதிகளில்தான் தங்குகின்றனர். இந்நிலையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் இதே விடுதிகளில் தங்கியிருந்து, தங்கள் கைவரிசையைக் காட்டுவது வழக்கமாக உள்ளது.
இதையடுத்து குற்றப் பின்னணி உடைய பக்தர்களைக் கண்டறிந்து, பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய செயலி ஒன்றை மதுரை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
தங்கு விடுதிகளில் உள்ள கணினிகளில் இந்தச் செயலியை நிறுவியுள்ளதாக மதுரை காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.
“விடுதிகளில் தங்குபவர்கள் அறை முன்பதிவுக்காக ஏதேனும் ஓர் ஆவணத்தை அளிக்கும்போது அதை விடுதி நி்ர்வாகம் புதிய செயலியில் பதிவு செய்யும்.இந்த விவரங்கள் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கும் அப்பகுதி காவல் உதவி ஆணையர் பார்வைக்கும் செல்லும்.
“அந்த விவரங்களை காவல்துறைக்கான சிறப்புச் செயலியில் உள்ளீடு செய்யும்போது குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கண்டுபிடிக்கலாம். அதன் பேரில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார் ஆணையர் நரேந்திரன்.
மதுரையில் உள்ள நட்சத்திர தங்கு விடுதிகள் தவிர மற்ற அனைத்து தங்கும் விடுதிகளிலும் இந்த நடவடிக்கை அமலுக்கு வந்துள்ளது.


