மதுரை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்துள்ள உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை ஜூலை 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா, இலங்கை இடையேயான கச்சத்தீவு ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டு கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் காரணமாக தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் 1983 முதல் 2005 வரை 378 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த பீட்டர்ராயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எனினும் ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே இலங்கையுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பீட்டர் ராயன் தமது மனுவில் வலியுறுத்தி உள்ள நிலையில், தலைமை நீதிபதி கங்காபுர்வாலா தலைமையிலான அமர்வு அம்மனு மீதான விசாரணையை மேற்கொண்டது.
அப்போது, கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என தலைமை நீதிபதி கூறினார்.
ஜூலை 7ஆம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

