திருச்சி: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ஆமைக் குஞ்சுகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக இரு பயணிகள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வெள்ளிக்கிழமையன்று அவ்விரு பயணிகளும் ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர். அப்போது அனைத்து பயணிகளும் வழக்கமான சுங்கப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், குறிப்பிட்ட இரு பயணிகள் மீது அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது. அவர்களுடைய உடைமைகளைச் சோதனையிட்டபோது 6,850 ஆமைக்குஞ்சுகளை மறைத்து எடுத்து வந்தது அம்பலமானது.
ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஆமைக்குஞ்சுகளைக் கடத்தி வந்தது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. எதற்காக இவற்றைக் கடத்தி வந்தனர், இந்தக் கடத்தலின் பின்னணியில் வேறு யார், யார் உள்ளனர் என்ற கேள்விகளுக்கு விடைகாண இரு பயணிகளிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

