நீதிமன்றம்: விடுமுறை இல்லா மருத்துவர்; மனைவிக்கு சொத்துகளில் பங்குண்டு

நீதிமன்றம்: விடுமுறை இல்லா மருத்துவர்; மனைவிக்கு சொத்துகளில் பங்குண்டு

1 mins read
9615b774-d1a1-4882-b368-cc8da9870227
சென்னை உயர் நீதிமன்றம் - படம்: ஊடகம்

சென்னை: கணவர் சேர்த்து வைக்கும் சொத்துகளில் மனைவிக்கும் சமபங்கு உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தாம் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அனுப்பிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துகளில் மனைவிக்கு உரிமையில்லை என கணவரால் கூற இயலாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

அண்மையில் கணவர் ஒருவர் மனைவி மீது தொடுத்த வழக்கை விசாரித்தபோதே உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இவ்வாறு குறிப்பிட்டார்.

கணவன் சம்பாதிப்பதும் மனைவி குழந்தைகள்,– குடும்பத்தைக் கவனிப்பதும் இயல்பாக நடக்கக்கூடியது என்று குறிப்பிட்ட அவர், மனைவி குடும்பத்தைக் கவனிப்பதால்தான் கணவரால் தனது பணியைச் செய்ய முடிகிறது எனச் சுட்டிக்காட்டினார்.

மேலும், கணவனின் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்துகளில் மனைவிக்கும் சம பங்கு பெற உரிமை உள்ளது என்றார் அவர்.

மனைவி என்பவர் குடும்பத்துக்காக 24 மணி நேரமும் உழைப்பதாகவும் விடுமுறை இல்லாத மருத்துவரைப்போல் செயல்படுவதாகவும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி குறிப்பிட்டார்.

எனவே, விடுமுறையில்லாமல் ஓர் இல்லத்தரசி மேற் கொள்ளும் பணியை, வருமானத்துக்காக கணவர் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது என்றார் நீதிபதி.

”கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்களைப் போன்றவர்கள். கணவர் வருமானம் ஈட்டுகிறார் என்றால், வீட்டில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறார் மனைவி.,” என்றார் நீதிபதி.

குறிப்புச் சொற்கள்