கோவை: லண்டனில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்ற கோவை மாணவர் ஜீவந்த் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
25 வயதான ஜீவந்த் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்றார். அங்கு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வெளியே சென்ற அவர் இரவு விடுதிக்குத் திரும்பவில்லை.
லண்டன் காவல்துறை அவரைத் தேடிவந்த நிலையில், பர்மிங்ஹம் கால்வாயில் இளையர் ஒருவர் உயிருக்குப் போராடுவதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற காவல்துறையினர் ஜீவந்தை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜீவந்த். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இத்தகவலை அறிந்த அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் மூழ்கி உள்ளனர்.
பல்கலைக்கழக நூலகத்துக்குச் செல்வதாக நண்பர்களிடம் கூறிச்சென்ற ஜீவந்தை யாரோ கால்வாயில் தள்ளிவிட்டதாகக் கருதப்படுகிறது.
யார் அவ்வாறு செய்தது, அதன் பின்னணி என்ன என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

