தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குளத்துக்குள் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள்

2 mins read
02758141-73e4-47e0-befa-3f7c2af857ff
குளத்தில் சிக்கிய ரூபாய் நோட்டு கட்டுகள் - படம்: ஊடகம்

குமரி: குளத்தில் மீன் பிடித்தபோது கட்டுக்கட்டாக சிக்கிய 2,000 ரூபாய் நோட்டுகளால் குமரியில் பரபரப்பு நிலவியது.

குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தை அடுத்த வேம்பனூரைச் சேர்ந்த இளையர்கள் சிலர் சனிக்கிழமையன்று அங்குள்ள குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வீசிய வலையில் அளவில் பெரிய நெகிழிப் பை ஒன்று சிக்கியது. அந்தப் பைக்குள் என்னதான் இருக்கும் என்பதை அறிய அந்த இளையர்கள் அதை கரைக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தனர்.

அப்போது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நெகிழிப் பைக்குள் கட்டுக்கட்டாக இருபது 2,000 ரூபாய் நோட்டுகள் காணப்பட்டன. ரூபாய் நோட்டுக் கட்டுகள் மீது தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் லேபிள் ஒட்டப்பட்டிருந்தது.

நெகிழிப் பைக்குள் இருந்ததால் அந்த நோட்டுக்கட்டுகள் முற்றிலுமாக சேதமடையவில்லை. அவற்றை எண்ணிப் பார்க்க முடியவில்லை என்றாலும் மொத்தம் ரூ.5 லட்சம் இருக்கக்கூடும் என அந்த இளையர்கள் தெரிவித்தனர்.

வேம்பனூர் பாசனக்குளம் வற்றிப் போயுள்ளது. எனவே தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உள்ளூர் இளையர்கள் மீன் பிடித்துள்ளனர்.

குளத்தில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் சிக்கியதாக பரவிய தகவலையடுத்து ஏராளமானோர் குளத்துக்கு அருகே திரண்டனர். இளையர்கள் பலர் குளத்துக்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி பரவலாகப் பகிரப்பட்டது.

முன்னதாக ரூபாய் நோட்டுக் கட்டுகள் சிக்கியதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வருவாய்த் துறையினரும் நேரில் வந்து ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்தனர்.

இந்த நோட்டுக் கட்டுகள் யாரால், எதற்காக குளத்துக்குள் வீசப்பட்டது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வருமான வரித்துறையின் சோதனை நடவடிக்கைக்கு அஞ்சி யாரேனும் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் மேலும் பல பைகளில் பணம் சிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் அவ்வட்டாரங்களில் இரு நாள்களாக பரபரப்பு நிலவி வருகிறது.

குறிப்புச் சொற்கள்