சென்னை: அண்மைய சில நாள்களாக சென்னையில் நூறு ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
எனவே நூறு ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை எனவும் அறிவுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் அவ்வப்போது அதிகரிப்பதும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அடுத்து அது கட்டுப் படுத்தப்படுவதும் வழக்கம்தான்.
இந்நிலையில் சென்னையில் நூறு ரூபாய் கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
சிறு பெட்டிக்கடைகள், பெட்ரோல் நிலையங்கள், சாலையோர உணவகங்கள் எனப் பல்வேறு இடங்களில் இந்தக் கள்ள நோட்டுகள் பயன்பாட்டில் உள்ளன
முன்பு 2000 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகள்தான் புழக்கத்தில் இருந்தன. இப்போது சமூக விரோதிகள் நூறு ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர். சிறு கடைகள் மூலம் இந்தக் கள்ள நோட்டுகள் வேகமாகப் பரவுகின்றன.
2,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. எனவே பொதுமக்கள் தற்போது ரூ.500, ரூ.100 நோட்டுகளை அதிக அளவில் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் நூறு ரூபாய் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.