மின்தூக்கியில் சிக்கிய இளையர் உடல் துண்டாகி பலி

மின்தூக்கியில் சிக்கிய இளையர் உடல் துண்டாகி பலி

1 mins read
03439761-111a-45f5-a5b3-a955cbd4962b
அபிஷேக். - படம்: ஊடகம்

சென்னை: நட்சத்திர விடுதி ஊழியர் ஒருவர் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதில் உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து சென்னை காவல்துறை விசாரித்து வருகிறது.

ராயப்பேட்டை பகுதியில் இயங்கி வரும் அந்த நட்சத்திர தங்குவிடுதியில் 27 வயதான அபிஷேக் என்பவர் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று ஏழாவது தளத்தில் சுத்தப்படுத்தும் பணியை முடித்துக்கொண்டு, தனது ‘டிராலி’யுடன் எட்டாவது தளத்துக்குச் செல்ல முற்பட்டார் அபிஷேக். அப்போது ‘டிராலி’யை முதலில் மின்தூக்கிக்குள் நுழைத்துள்ளார். பின்னர் அவர் உள்ளே செல்வதற்குள் மின்தூக்கி மேலே செல்லத் தொடங்கிவிட்டது.

இதனால் அபிஷேக்கின் கால் மட்டும் மின்தூக்கிக்கு வெளியே சிக்கிக்கொண்டது. மின்தூக்கி செல்லத்தொடங்கியதும் அவர் கால் சிதையத் தொடங்க, வலியில் துடிதுடித்துப் போன அவர் உதவி கேட்டு கூக்குரல் எழுப்பி உள்ளார்.

எனினும் மின்தூக்கி நிற்காமல் மேலே சென்றதில் அபிஷேக்கின் உடல் இரண்டு துண்டாகி, அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

மின்தூக்கிக்குள் இருந்தபடி அபிஷேக் குரல் எழுப்பியதால் யாருக்கும் கேட்கவில்லை எனக்கூறப்படுகிறது.

மின்தூக்கி முறையாகப் பராமரிக்கப்படாததால் அதன் உணர் திறன் கருவி (சென்சார்) சரியாக வேலை செய்யவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
விபத்துவிடுதி