சென்னை: நடிகர் விஜய் மீது காவல்துறையில் அளிக்கப்பட்டுள்ள புகார் அரசியல், திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் தற்போது நடித்து வரும் ‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் இளையர்களை போதைப் பொருள்களைப் பயன்படுத்த தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“லியோ’ படத்தின் பாடல்கள் இளைஞர்கள் ரவுடிகளைப் போல் செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. எனவே விஜய் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என செல்வம் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தின் முதல் பாடல் அவரது பிறந்தநாளையொட்டி அண்மையி்ல் வெளியானது. இப்போது அப்பாடல் சர்ச்சையாகி உள்ளது.
விஜய் மிக விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விஜய் தனது படங்களில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர் செல்வம் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி உள்ளனர்.

