தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென் மாவட்டங்களில் போதைப்பொருள் ஒழிப்பு தீவிரம்

2 mins read
33fae362-ef91-4ef5-a280-55e322689de6
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா. - கோப்புப்படம்: ஊடகம்

மதுரை: தமிழகத்தின் தென் மாவட்டங்களில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ளது.

மதுரை, நெல்லை உள்ளிட்ட தென்மண்டலங்களில் கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் கஞ்சா விற்ற 917 பேர் கைதாகி உள்ளனர்.

கஞ்சா வியாபாரிகளின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் 1,316 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களின் 2,448 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் போதைப்பொருள்கள் தொடர்பான 684 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்‌ரா கர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தென் மாவட்டங்களில் போதைப் பொருள்கள் புழக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், கஞ்சா, குட்கா உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருள்களையும் தமிழகத்தில் முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.

மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வோர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோரை களை எடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஐஜி அஸ்ரா கர்க் மேலும் குறிப்பிட்டார்.

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுவதை அறிந்த காவல்துறையினர் தற்போது, அவற்றைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதையடுத்து வெளி மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள கஞ்சா வியாபாரிகளையும் கண்டுபிடித்து கைது செய்து வருவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

நடப்பாண்டில் மட்டும் தென் மாவட்டங்களில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட 71 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 3,200 கஞ்சா வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் 282 காவல் நிலைய பகுதிகளில் 100 விழுக்காடு அளவுக்கு போதைப்பொருள்கள் விற்பனை இல்லை என்ற இலக்கு எட்டப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்