சென்னை: தமிழ்நாட்டிற்கு காய்கறி வரத்து குறைந்துவிட்டதால் மாநிலத்தில் காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
சென்னையில் சென்ற வாரம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ ரூ.80க்கு விலை உயர்ந்தது.
15 கிலோ தக்காளி உள்ள ஒரு பெட்டி சனிக்கிழமை 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன் விலை திங்கள்கிழமை ரூ.900க்கு உயர்ந்தது என்றும் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சில்லறைக் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.100க்கு விற்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதுவே விலை உயர்வுக்குக் காரணம் என்று கோயம்பேடு வியாபாரிகள் கூறினார்கள்.
பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் மொத்த விற்பனை விலை கடந்த 30 நாள்களில் கிலோ 10 ரூபாயில் இருந்து கிலோ 25 ரூபாய் ஆகி பிறகு, கிலோ ரூ.40க்கு உயர்ந்து இப்போது ரூ.90 ஆக உயர்ந்துவிட்டது.
அதேபோல, இஞ்சி விலை ஒரு மாதத்திற்கு முன் கிலோ ரூ.60க்கு விற்றது. இப்போது இதன் விலை ஒரு கிலோ ரூ.200 ஆகிவிட்டது.
அவரை உள்ளிட்ட இதர காய்கறிகளின் விலைகளும் கடுமையாக விலை ஏறிவிட்டன.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஒரு மாத காலத்தில் ஏறக்குறைய எல்லா காய்கறிகளுமே கொஞ்சம் கொஞ்சமாக விலை கூடி வந்திருக்கின்றன. அதேவேளையில், முருங்கைக்காய், பீன்ஸ் ஆகியவற்றின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்துள்ளது.
கடும் வெப்பமும் தண்ணீர் பஞ்சமும் உற்பத்தியைப் பாதித்து இருக்கின்றன. இதனால் மொத்த விற்பனைச் சந்தைக்குக் காய்கறி வரத்து குறைந்துவிட்டது. இதுவே விலை ஏற்றத்துக்கு காரணம் என்று சென்னை அண்ணா காய்கறி மொத்த விற்பனை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் செந்தில் குமார் கூறினார்.
ஒரு மாதமாகவே காய்கறி விலைகள் கூடி வருகின்றன. ஆடி மாதத்தில் திருவிழாக்களும் நிறைய நடக்கும். ஆகையால், காய்கறி விலைகள் வரும் நாள்களிலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பலரும் கூறினர்.
இதேபோன்ற சூழ்நிலையே கோயம்புத்தூர் பகுதிகளிலும் நிலவுகிறது. கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் காய்கறிகள் வரத்து குறைந்து இருப்பதால் விலை ஏறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோயம்புத்தூர் மொத்த விற்பனைச் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 2,300 டன் தக்காளி வரும். ஆனால், திங்கள்கிழமை வெறும் 400 டன்தான் வந்தது என்று அந்தச் சந்தையைச் சேர்ந்த மொத்த விற்பனை வியாபாரி ஒருவர் கூறினார்.
கர்நாடகாவில் பருவமழை தொடங்கி இருப்பதே காய்கறி வரத்து குறைந்து இருப்பதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.