சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களையும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ரூ.1,510 கோடி மதிப்பில் 100 புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்திடப்பட்டன.
அவை ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என்று தெரிவிக்கப்பட்டது.
மாநிலத்தின் பொருளியல் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் உதவும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 27ஆம் நாளை பன்னாட்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாளாக அரசு கொண்டாடி வருகிறது.
அந்த விழா செவ்வாய்க்கிழமை சென்னையில் நடந்தது. அதில் முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த விழாவில் மொத்தம் ரூ.1,723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் உறுதியாயின.
அவற்றின் மூலம் 30,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தமிழ்நாட்டில் இதுவரை ஆறு தொழிற்பேட்டைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு மாவட்டங்களில் ஆறு தொழிற்பேட்டைகளை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அறிவித்தார்.
திண்டிவனத்தில் மருந்துப் பொருட்கள் பெருங்குழுமம், திருமுடிவாக்கத்தில் துல்லிய உற்பத்திப் பெருங்குழுமம், விண்வெளி, பாதுகாப்புத் துறை சார்ந்த பெருங்குழுமம், மின்வாகனத் துறை சார்ந்த பெருங்குழுமம் ஆகியவற்றை அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்யும் பணிகளும் நடந்து வருவதாக முதல்வர் குறிப்பிட்டார்.