அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களுக்கு உடனே பணி வழங்க வைகோ வலியுறுத்து

அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களுக்கு உடனே பணி வழங்க வைகோ வலியுறுத்து

படம்: ஊடகம்

27 Jun 2023 - 9:18 pm

2 mins read

சென்னை: “சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சியைப் படித்து முடித்தவர்களுக்கு, தமிழ் நாடு அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற அர்ச்சர்களுக்கு தமிழக அறநிலையத்துறை உடனடியாக பணி வழங்க வேண்டும்,” என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் யார் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கோயில் நிர்வாகமே அர்ச்சகரை நியமித்துக்கொள்ளலாம் என்றும், பிறப்பின் அடிப்படையில் பாரபட்சம் இன்றி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றும், இதற்காக ஆகமக் கோயில் எது? ஆகமம் அல்லாத கோயில் எது? என்பது குறித்து கண்டறியும் குழு அறிக்கை வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை பெரியாரின் கோரிக்கையான அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு மறைந்த முதல்வர் கருணாநிதியின் அரசு செயல் வடிவம் கொடுத்தது. நீதிமன்றக் குறுக்கீடுகள் காரணமாக அந்த முயற்சிக்கு இடையூறு வந்தது. அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மீண்டும் அர்ச்சகர் சட்டத்துக்குப் புத்துயிர் கொடுத்துள்ளது என்று திரு வைகோ கூறினார்.

குறிப்புச் சொற்கள்