சென்னை: சென்னையைச் சேர்ந்த மோகன்நாத், 54, என்ற தீவிர சாய்பாபா பக்தர், கேகே நகரில் உள்ள சாய்பாபா கோயிலில் சபரிநாதன், 40, சுப்புலட்சுமி, 43, என்ற இருவரையும் ஒருநாள் சந்தித்தார்.
தங்களைத் தீவிர சாய்பாபா பக்தர் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட சபரிநாதன், சுப்புலட்சுமி இருவரும் சாமி அருள் வந்ததுபோல் நடித்து மோகன்நாத்துக்கு ஆபத்து வரப்போவதாகவும் அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் கூறினர்.
அதை நம்பிய மோகன்நாத், அந்த இருவரின் பேச்சைக் கேட்டு 15 பவுன் நகைகளையும் ரூ.3 லட்சம் பணத்தையும் அந்த இருவரிடமும் கொடுத்தார்.
பலமுறை பூஜை செய்து மோகன்நாத்தை அவர்கள் இருவரும் ஏமாற்றினர். திடீரென இருவரும் மாயமாகிவிட்டனர். அதையறிந்து மோகன்நாத் காவல்துறையில் புகார் செய்தார்.
அந்த இருவரையும் அதிகாரிகள் வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது பவுன் நகைகளும் ரூ.60,000 பணமும் மீட்கப்பட்டது.
சபரிநாதன் ஒரு மோசடி வழக்கு தொடர்பில் புதுச்சேரி சிறையில் இருந்தபோது அங்கு வேறொரு வழக்கில் கைதாகி சுப்புலட்சுமியும் சிறையில் இருந்தார்.
சிறைச்சாலையிலேயே இருவருக்கும் இடையில் நட்பு துளிர்விட்டது. பிணையில் வெளியே வந்த பிறகு இருவரும் சேர்ந்து மோசடி வேலைகளில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது.

