சென்னை: பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று நாட்டிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அரசு சார்பில் கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இத்தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை எழும்பூர் பகுதியிலும் மதுரையிலும் இந்த கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும் எதிர்வரும் செப்டம்பர் அவை அமைக்கப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனியார் கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு காரணங்களால் கருத்தரிக்க முடியாமல் வேதனையிலும் ஏக்கத்திலும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்கள் இம்மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்காக சில லட்சங்களை செலவிட வேண்டியுள்ளது. எனவே ஏழ்மையில் உள்ள பெண்கள் தனியார் கருத்தரிப்பு மையங்களில் சிகிச்சை பெறுவது எட்டாக்கனியாக உள்ளது.
இதையடுத்து, தமிழக அரசே கருத்தரிப்பு மையங்களை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு கருத்தரிப்பு மையங்களை திறக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 40க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எந்த ஓர் அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“எனவேதான் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர். தனியார் கருத்தரித்தல் மையங்கள், அவற்றில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.
“ஆகவே, இதனால் அரசு மருத்துவமனைகளில் விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை, விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன,” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.


