சென்னை: காவல்துறை உயரதிகாரிகள் இனி வாரந்தோறும் ஒருநாள் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசாணையாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல் ஆணையர்களும் கண்காணிப்பாளர்களும் இந்த உத்தரவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை உயரதிகாரிகள் பொதுமக்களை அவ்வப்போது நேரில் சந்தித்து புகார் மனுக்களைப் பெறுவது நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் பொதுமக்களை குறிப்பிட்ட நாள்களில்தான் சந்திக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.
இந்நிலையில், பொதுமக்களுடனான இந்தச் சந்திப்பு பெயரளவில் இருக்கக்கூடாது என தமிழக அரசு மறைமுகமாக அறிவுறுத்தி உள்ளது.
“மாநகரக் காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் இனி வாரத்தில் ஒருநாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும்.
“புதன்கிழமைதோறும் காலை முதல் மாலை வரை ஆணையர், கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று, அது தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும்,” என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

