புதுடெல்லி: உரிய காலக்கெடுவுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முடிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மத்திய அரசின் உதவியோடு செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்கள் குறித்து பிரதமர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
சுகாதாரம், ரயில்வே, சாலைப் போக்குவரத்து ஆகிய அமைச்சுகள் முன்னுரிமை அளித்துள்ள 12 முக்கியத் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டுப் பெற்றார் பிரதமர் மோடி.
மத்திய சுகாதார அமைச்சின் ஏழு திட்டங்கள், ரயில்வே, சாலைப்போக்குவரத்து அமைச்சுகளின் ஐந்து திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனைகள் வழங்கியதாகவும் 12 திட்டங்களும் ரூ.1.21 லட்சம் கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை, ராஜ்கோட், ஜம்மு உள்ளிட்ட ஏழு இடங்களில் மத்திய அரசின் உதவியோடு எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளன.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் மூன்றாண்டு காலமாகியும் அதற்கான பணிகள் இன்னும் வேகமெடுக்கவில்லை.
இந்நிலையில், ஆய்வுக்கூட்டத்தின்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் குறித்து பிரதமர் விவரங்கள் கேட்டறிந்தார்.
ஏழு இடங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகளை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளதாக தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்நிலையில், பிரதமரின் உத்தரவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை கவனத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்தில் சில திட்டங்களை விரைவாக நிறைவேற்றி வருவதாகக் கூறப்படுகிறது.