செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை அமர்வுக்கு மாற்றம்

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சென்னை அமர்வுக்கு மாற்றம்

படம்: தமிழக ஊடகம்

29 Jun 2023 - 8:33 pm

2 mins read

மதுரை: அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க உத்தரவிட வேண்டும் எனும் வழக்கை சென்னை அமர்வுக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையின் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா, வானதிராயன் பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதித்தும் அந்த பதவியில் இருந்து அவரை நீக்கியும் உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த வழக்கையும் சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.

கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மின்சாரத்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறைகளின் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதையடுத்து அவரிடம் இருந்த மின்துறையும் கலால் துறையும் மற்ற இரண்டு அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என தமிழக அரசு அறிவித்தது. இது, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறிப்புச் சொற்கள்