சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடப்பு தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெறுவதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தலைமைச் செயலாளராகப் பணியாற்றி வந்த திரு. இறையன்பின் பதவிக்காலம் இன்று முடிவடைகிறது. அவர் பிற்பகலில் ஓய்வுபெற்றுச் செல்லும்போது, தலைமைச் செயலாளருக்கான அனைத்துப் பொறுப்புகளையும் சிவ்தாஸ் மீனாவிடம் ஒப்படைக்க உள்ளார்.
மாநில அரசின் அனைத்து துறைகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாளராகவும் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளிலும் நியமிக்கப்படுவர்.
அவர்களுள் தலைமைச் செயலாளர் பதவியானது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். திரு. இறையன்பின் பதவி நீட்டிக்கப்பட மாட்டாது என அண்மையில் தகவல் வெளியானது.
அதையடுத்து புதிய தலைமைச் செயலாளர் யார் என்பது தொடர்பாக எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் அதிகரித்து வந்தது. பொதுவாக இந்தப் பதவியைப் பெறுவதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் முயற்சி செய்வது வழக்கம்.
எனினும் அடுத்த தலைமைச் செயலாளர் என்பது குறித்து அரசுத்தரப்பில் இருந்து எந்தவித தகவலோ, அதிகாரபூர்வ அறிவிப்போ வெளியாகவில்லை. நடப்பு தலைமைச் செயலாளர் இறையன்பு பணி ஓய்வு பெறும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தமிழ்நாட்டின் 49ஆவது தலைமைச் செயலராகப் பொறுப்பேற்க உள்ளார். சிவ்தாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 1989ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவ்தாஸ் தமிழகத்தின் காஞ்சி புரம் மாவட்டத்தின் உதவி ஆட்சியராகத் தமது பணியைத் தொடங்கினார். பின்னாள்களில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி உள்ளார்.
போக்குவரத்து, கூட்டுறவு, சுகாதாரம், மின்சாரம் என பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பு வகித்தபோது, அவரது செயலாளர்களில் ஒருவராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்ட இவர், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைக்கப்பட்டார்.
முப்பது ஆண்டுகால ஐஏஎஸ் பணி அனுபவம் கொண்டுள்ள சிவ்தாஸ் மீனா, அனைத்துலக அளவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். தற்போது நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக பதவி வகித்து வரும் அவருக்கு அதிகாரிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தமிழக காவல்துறையின் புதிய தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர் தற்போது சென்னை காவல் ஆணையராக உள்ளார்.
இந்நிலையில், உளவுத் துறையில் நீண்ட அனுபவமுள்ள சங்கர் ஜிவால், தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

