சென்னை: அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படும் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளதை அடுத்து தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த உத்தரவுக்கு திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரின் உத்தரவை வரவேற்றுள்ளன.
இத்தகைய பரபரப்பான சூழலில், செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக செந்தில் பாலாஜியைப் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார்.
செந்தில் பாலாஜி ஊழல், குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் அமைச்சரவையில் தொடர்ந்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என்றார்.
ஆளுநரின் உத்தரவை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் மேலும் கூறியுள்ளார்.