சென்னை: தமிழக காவல் துறைத் தலைவராக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (ஜூன் 30) பதவியேற்றுக் கொண்டார்.
நடப்பு காவல்துறைத் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபு பணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து காவல்துறையின் சட்டம், ஒழுங்கு பிரிவு டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார்.
அவர் இதுவரை சென்னை காவல் ஆணையராக பொறுப்பு வகித்து வந்தார். இதையடுத்து சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை பெருநகரின் 108ஆவது காவல் ஆணையராக 2021, மே 8ஆம் தேதி சங்கர் ஜிவால் பதவியேற்றார். அதன் பின்னர் சென்னையில் குற்றச் செயல்கள் கட்டுக்குள் வந்தன. குறிப்பாக ரவுடித்தனம், கட்டப்பஞ்சாயத்து, குழு மோதல் ஆகியவற்றுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஆணையர் சங்கர் ஜிவால்.
காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றுவோர்க்கு வாரந்தோறும் ஊக்கத் தொகைகளும் பரிசுகளும் வழங்கியதுடன், பாராட்டுச் சான்றிதழும் வழங்கி கௌரவப்படுத்தினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘நட்சத்திர காவலர்’ பட்டம் வழங்கியதன் மூலம் ஆணையர் சங்கர் ஜிவால் தங்களை உற்சாகத்துடன் கடமையாற்ற ஊக்கம் அளித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால், 1990ஆம் ஆண்டில் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
பொறியியல் பட்டதாரியான அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, குமாவோனி ஆகிய 4 மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.