சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் உத்தரவை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கியதாக திமுக கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சட்ட வல்லுநர்களுடனும் மூத்த அமைச்சர்களுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தமது உத்தரவு வெளியான ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு அதை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ளதாகவும் இதுகுறித்து அவர் முதல்வருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு, அவற்றின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக ஊடகங்களில் ஒரு தகவல் வலம் வருகிறது.
மொத்தத்தில் ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.