3,585 ஹெக்டர் நிலம்: புதிய காப்புக் காடுகளாக அறிவிப்பு

2 mins read
6e8f9fc1-eb51-4168-97d4-489e727bcccd
தமிழக வனப்பகுதி. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் 3,585 ஹெக்டர் பரப்பளவிலான நிலப்பகுதியை புதிய காப்புக் காடுகளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து அப்பகுதிகளில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், வனப் பாதுகாப்புச் சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகிறது.

இந்த நடைமுறையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காப்புக் காடுகளாக அறிவிக்கப்படும் நிலப்பகுதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலப்பகுதிகள் திண்டுக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மதுரை, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பகுதிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையடுத்து 24 புதிய காப்புக் காடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கியது தமிழக அரசு.

அதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 265 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் புவியியல் வனம் மற்றும் மரங்களின் பரப்பளவை 33% ஆக அதிகரிக்க வேண்டும் என்பதே அரசின் இலக்காகும்.

“வனப்பகுதிக்கு வெளியே உள்ள தரங்குன்றிய வன நிலப் பரப்பு மற்றும் பிற தரங்குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் பொருட்டு பசுமைத் தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டது.

“தமிழ்நாடு அரசு பல பகுதிகளை ‘காப்புக் காடுகள்’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தும்போது வனப் பாதுகாப்புச் சட்டம் 1980இன் படி நடைமுறைகள் பின்பற்றப்படுவது அவசியமாகிறது,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் இந்நடவடிக்கையை சமூக, இயற்கை வள ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். இதுபோன்ற மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்