சென்னை: குடியேற்றத்துறை அதிகாரியாகப் பணியாற்றி வரும் திருநங்கை பிரித்திகா, குழந்தை தத்தெடுப்பு தொடர்பாக தொடுத்துள்ள வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தை தத்தெடுப்புக்காக பிரித்திகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையைப் போக்க தாம் குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்ததாகவும் இதற்காக டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் இணையம் மூலம் விண்ணப்பித்ததாகவும் பிரித்திகா தெரிவித்துள்ளார்.
எனினும் திருநங்கை என்ற காரணத்தை சுட்டிக்காட்டி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அந்த உத்தரவை ரத்து செய்து தனது விண்ணப்பத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,” என்பதே பிரித்திகாவின் கோரிக்கையாகும்.
தான் அரசுப் பணியில் உள்ளதால் குழந்தையைச் சிறந்த முறையில் வளர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கும் மத்திய தத்தெடுப்பு ஆணையத்திற்கும் உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், அதற்கு இரண்டு வாரம் அவகாசம் அளித்துள்ளது. பிரித்திகா முன்பு காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியில் இருந்தார்.


