மெர்கன்டைல் வங்கியில் ரூ.4,110 கோடி முறைகேடு

2 mins read
37f2129d-a799-4da2-be1c-914164e17219
மெர்கன்டைல் வங்கிக் கிளை - படம்: ஊடகம்

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் நிர்வாகம் 4,110 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்குகளைக் காட்டாமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 21 மாநிலங்களில் மெர்கன்டைல் வங்கி செயல்பட்டு வருகிறது. மொத்தம் 546 கிளைகள் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்த வங்கி தொடர்பாக அண்மையில் சில புகார்கள் எழுந்தன. இதையடுத்து வரி ஏய்ப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் தூத்துக்குடியில் உள்ள தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

இரு நாள்கள் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவற்றில் உள்ள தகவல்கள் குறித்து விரைவில் விவரம் தெரிவிக்கப் படும் என்றும் வருமானவரித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ரூ.4,110 கோடிக்கு மெர்கன்டைல் வங்கி நிர்வாகம் உரிய கணக்குகள் காட்டவில்லை என வருமானவரித்துறையின் டெல்லி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றில், வெளிநாடு பணப் பரிமாற்ற நிறுவனங்களும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளரின் ஒவ்வொரு பணப் பரிமாற்றம் தொடர்பான ஆண்டு தகவல் அறிக்கையை அளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் சில வங்கிகள் இவ்வாறு அறிக்கை அளிப்பதில்லை என்றும் இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு வங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும் வருமானவரித் துறையின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

“இந்த ஆய்வின்போது அக்குறிப்பிட்ட வங்கியின் முதலீடுகள், பணப் பரிவர்த்தனைகள், பங்குத் தொகைகள் என அனைத்திலும் முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“குறிப்பாக ரூ.2,700 கோடி மதிப்புள்ள நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்குகள் முழுமையாகக் காண்பிக்கப்படவில்லை. ரூபாய் 110 கோடி கடன் அட்டை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. 200 கோடி ரூபாய் லாப பங்குத்தொகை குறித்து எந்தக் கணக்கும் காட்டப்படவில்லை,” என வருமான வரித்துறை கூறுகிறது.

அந்த வங்கி ஏற்கெனவே தாக்கல் செய்துள்ள கணக்குகளும் இன்னும் முழுமையடையவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் தவறாக உள்ளதையும் அண்மைய ஆய்வு நடவடிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி நிர்வாகிகளிடம் விசாரணை செய்ய வருமானவரித் துறையினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்