தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை: 32 நிலையங்களுடன் 39 கிலோ மீட்டருக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்

2 mins read
b152ceb4-27c5-4aa8-b53f-3e18d57d40a7
சென்னை மெட்ரோ ரயில் - படம்: ஊடகம்

கோவை: எதிர்வரும் 15ஆம் தேதியன்று கோவை கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திட்ட அறிக்கை தயாரிப்புப் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கோவை அவினாசி சாலை, சக்தி சாலை என இரு சாலைகளில் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தபடுகிறது என்றும் மொத்தம் 39 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்ட திரு.சித்திக், அவினாசி சாலையில் 17 ரயில் நிலையங்கள், சக்தி சாலையில் 14 ரயில் நிலைங்கள் அமைய இருப்பதாகத் தெரிவித்தார்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்தும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்திக், நிலையில், திட்டம் செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கபட்டதாகத் தெரிவித்தார்.

“தொடக்கத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் அளித்த பின்னர், மத்திய அரசின் ஒப்புதல், பன்னாட்டு நிறுவன நிதி பெற்று இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கின்றது.

“முதற்கட்டமாக இரு ரயில் பாதைகளும் உயர்மட்ட பாலமாக அமைக்கப்பட உள்ளன. மெட்ரோ பணிகளைத் துவங்கியதில் இருந்து 3.5 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் 250 பேர் பயணிக்க முடியும். மெட்ரோ ரயில் திட்டம் 150 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும்,” என்று திரு.சித்திக் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்