பிரபல திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் தாயார் மேகலா சித்ரவேல் முனைவர் பட்டம் பெற்று சாதித்துள்ளார்.
தாம் முனைவர் பட்டம் பெறுவதற்கு தனது மகன் முழு ஆதரவு அளித்து ஊக்கப்படுத்தியதாக மேகலா சித்ரவேல் கூறினார்.
தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராகவும் செயலாற்றி வருகிறார் வெற்றிமாறன்.
இந்நிலையில், அவரது தாயார் மேகலா சித்ரவேல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். காலஞ்சென்ற நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
மேகலா சித்ரவேல் நல்ல எழுத்தாளரும்கூட. ‘கமலி அண்ணி’, ‘ரதிதேவி வண்டல்’, ‘வசந்தமே வருக’ உள்ளிட்ட நாவல்களை அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மேகலா சித்ர வேலுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முனைவர் பட்டம் வழங்கினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமதி. மேகலா, தாம் படித்துச் சாதிக்க வேண்டும் என்பதற்காக மகன் வெற்றி மாறன் பல்வேறு உதவிகளைச் செய்தார் என்றும் நான்கு ஆண்டுகளாக தமது கல்விச் செலவுகளை மகனே ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
“மகன் அளித்த ஊக்கம்தான் என்னை முனைவர் பட்டம் பெற வைத்தது. இது வெற்றி மாறனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும்,” என்றார் மேகலா சித்ரவேல்.
இதற்கிடையே தனது தாயார் முனைவர் பட்டம் பெற உறு துணையாக நின்ற வெற்றி மாறனை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி உள்ளனர். மகனின் கடமையைச் சரிவர நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.


