பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை அதிரடியாக அறிவித்தார்.
அதன் தொடர்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஐந்து பக்கக் கடிதத்தையும் அவர் அனுப்பியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநரின் இம்முடிவிற்கு ஆளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனையடுத்து, “அமைச்சர் பதவியிலிருந்து ஒருவரை நீக்க ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்ட நிபுணர்கள் பலரும் அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கருத்துரைத்தனர். அதற்குச் சான்றாக அண்மையில் இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பையும் அவர்கள் மேற்கோள் காட்டினர்.
மாநில ஆளுநர், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படியே செயல்பட முடியும் என்றும் அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்க மட்டுமே ஆளுநர் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியைப் பதவிநீக்கம் செய்வதாக அறிவித்த ஐந்து மணி நேரத்திற்குள் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக ஆளுநர் ரவி அறிவித்தார். இம்முறையும் அவர் முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார்.
இவ்விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலையிட்டு, ஆளுநருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
சட்டரீதியிலான முடிவுகளை எடுக்கும்போது அறிவுபூர்வமாகவும் கவனமாகவும் நடந்துகொண்டு, தேவையற்ற சர்ச்சையில் சிக்குவதைத் தவிர்க்குமாறு ஆளுநருக்கு அவர் அறிவுரை வழங்கியதாகத் தகவல்கள் கூறின.
இதனையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை அணுகி, ஆலோசனை பெற்று, அதன்படி நடந்துகொள்ள இருப்பதாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, “அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அமைச்சரவையில் ஒருவரைச் சேர்ப்பதற்கோ நீக்குவதற்கோ முதலைமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநரின் நிலை தவறு என்பதை விளக்கி, முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்குக் கடிதம் எழுதவுள்ளார்,” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறினார்.
எவரது அறிவுரையையும் கேளாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செயல்பட்டு, முதலமைச்சருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையை ஆளுநர் மீறிவிட்டதாகவும் அவர் சாடினார்.