வேலூர்: உள்ளாட்சித் தேர்தலில் போலி சாதி சான்றிதழ் கொடுத்து வெற்றி பெற்ற பெண் ஊராட்சி மன்றத் தலைவர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தேர்தலுக்கு முன்பு அவருக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை ரத்து செய்ததாக வருவாய் துறை அறிவித்துள்ளதுடன் அவரது வீட்டின் முன் அதற்கான உத்தரவின் நகலையும் அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், வேலூர் மாவட்டம் அணைகட்டு ஒன்றியத்துக்குட்பட்ட தோளப்பள்ளி ஊராட்சியில் போட்டியிட்டார் கல்பனா சுரேஷ்.
அது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடமாகும். அதற்கான சாதிச் சான்றிதழை அளித்திருந்தார் கல்பனா. ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட அவர், 609 வாக்குகளில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊராட்சித் மன்றத் தலைவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது போலிச் சான்றிதழை அளித்ததும் தெரியவந்தது.
ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பாக்கியராஜ் என்பவர் அளித்த புகாரின் மூலம் இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து கல்பனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.