சென்னையில் நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை

1 mins read
2ee68ff2-2671-4b9c-9fb5-8ec1b7226344
அமைச்சர் பெரிய கருப்பன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இனி நியாய விலைக் (ரேஷன்) கடைகளில் தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.150க்கு விற்கப்படுகிறது. இதனால் அன்றாட சமையலில் தக்காளியை சேர்க்க முடியவில்லை என குடும்பத் தலைவிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்றும் தமிழகத்தில் அதன் விலையை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

“சென்னையில் 82 நியாய விலைக்கடைகளில் ஜூன் 4ஆம் தேதி முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். பண்ணைப் பசுமைக் கடைகளை போல நியாய விலைக் கடைகளிலும் கிலோ ரூ. 60க்கு தக்காளி விற்பனை செய்யப்படும்.

“சென்னையைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நுகர்வோர், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்