தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொல்லியல் அகழ்வாராய்ச்சி: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அழைப்பு

2 mins read
c474e814-b094-452b-8f55-6c65ac51c0dc
பென்னாகரம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சில தொல்பொருள்கள். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளின் மூலம் ஏராளமான அரிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனவே தொல்லியல் துறை சார்ந்த ஆய்வுகளை தமிழக அரசு ஊக்குவித்து வருவதாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் காணொளி வசதி மூலம் பங்கேற்றுப் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார்.

’யாதும் ஊரே; யாரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனார் எழுதியதைக் குறிப்பிட்டு, தமிழ் மொழி எப்போதும் அனைத்து மக்களையும் வாழ வைக்கும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

“தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளையும் அவற்றுக்கான களங்களையும் பார்வையிட வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழகத்துக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும் என வலியுறுத்தினார்.

“இந்திய துணை கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும். மொழி உணர்வு என்பது தமிழருக்கு குருதி போன்றது. தமிழ் நமக்கு மொழியாக மட்டுமல்லாமல் உயிராக, போராட்டத்தின்போது வாளாக உள்ளது.

“தமிழ் இனம் மட்டுமே மொழியின் பெயரில் வாரிசுகளுக்கு பெயர் வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. தமிழ் மொழி எப்போதும் எல்லோரையும் வாழ வைக்கும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பென்னாகரம் அகழாய்வு: 52 தொல்பொருள்கள் கண்டெடுப்பு

இதற்கிடையே தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த பூதிநத்தம் கிராமத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியின்போது 52 தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றுள் பல்வேறு கற்கால கருவிகள், விலங்குகளின் எலும்புகள் ஆகியவை அடங்கும். அடுத்தகட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக 17 குழிகள் தோண்டப்பட்டுள்ளன என்றும் ஆறு புதிய கற்கால கருவிகள் கிடைத்துள்ளன என்றும் தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.