தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆளுநருக்கு கடிவாளம்: பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்

2 mins read
5d3a1ffd-0803-4d31-9a50-f1e0a2d558bd
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மாநில அமைச்சரை நியமிப்பதற்கும் பதவி நீக்கம் செய்வதற்கும் ஆளுநருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மத்திய அரசு கடிவாளம் போட வேண்டும் என்றும் இல்லையெனில் மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் மூலம் திமுக அமைச்சர்களை குறிவைத்து பாஜக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி உள்ள அவர், காங்கிரசையும் உள்ளடக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று தாம் தெரிவித்த கருத்து பாஜக தலைமையை கோபப்பட வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

“மத்தியில் காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி என்ற ஆலோசனையை நான் நிராகரித்துவிட்டேன். பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாஜக தலைவர்களை அச்சமடைய வைத்துள்ளது.

“அமலாக்கத்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் காரணமாக பாஜக மீதான திமுகவின் நிலைப்பாடு மாறிவிடாது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்பேட்டியில் திட்டவட்டமாகக் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை சுமூகமாகச் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பதே ஆளுநர் ரவியின் நோக்கம் என்று குற்றம்சாட்டி உள்ள அவர், மக்களுக்கான நலத்திட்டங்களை திமுக நல்லபடியாக அமல்படுத்திவிடக் கூடாது என்பதிலும் ஆளுநர் முனைப்பாக இருப்பதாகச் சாடி உள்ளார்.

“பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்ட இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டை மேம்படுத்தியுள்ளோம். ஆளுநரால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தமிழக ஆளுநருக்கு சிறிதளவும் இல்லை.

“அதனால்தான், தமிழகத்தைப்பற்றி முதலீட்டாளர்கள் மத்தியில் மோசமான பிம்பத்தை ஏற்படுத்த ஆளுநர் முயற்சி செய்கிறார்.

“தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கிடைக்கக் கூடாது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடாது என்பதே ஆளுநர் ரவியின் விருப்பமாக உள்ளது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழக ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது.

அதன் உச்சமாக அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு திமுக அரசு கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது.

ஆளுநர் தமது உத்தரவை நிறுத்தி வைத்துள்ளார். எனினும் அவரது செயல்பாடு திமுக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஆங்கில ஊடகத்துக்கான பேட்டியில் ஆளுநரை மீண்டும் கடுமையாக விமர்சித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இரு தரப்புக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்