செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதிக்குப் பரிந்துரை

செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: 3வது நீதிபதிக்குப் பரிந்துரை

2 mins read
6dc7bc77-64de-4db7-90da-2d8b465c683d
அமைச்சர் செந்தில் பாலாஜி - கோப்புப்படம்: ஊடகம்
Google News Preferred Icon

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின் போது இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இதன்படி ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், அவரை உடனடியாக விடுவிக்கலாம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்றும் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்றும் சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்றக் காவலாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்துள்ளனர். அதையடுத்து இப்போது மூன்றாவது நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், மூன்றாவது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித்தருவதாகக் கூறி 81 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக 2018ஆம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதன்படி, சட்டவிரோதப் பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையும் மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்தது.

இதையடுத்து செந்தில் பாலாஜி வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை சந்திக்க நேரிட்டது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டபோது மயங்கி விழுந்தார்.

பின்னர் இருதயத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

குறிப்புச் சொற்கள்