காய்கறித் தட்டுப்பாடு; உச்சத்தில் விலை

காய்கறித் தட்டுப்பாடு; உச்சத்தில் விலை

2 mins read
92cf3d92-cd65-45c3-bb85-c1c148dab7d9
கோப்புப்படம்: - ஊடகம்

மதுரை: தமிழகத்தில் மட்டுமில்லாது, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும், காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது.

அதனால் அவற்றின் விலை என்றும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளது.

பொதுவாக தக்காளி, வெங்காயம், பீன்ஸ் ஆகிய காய்கறிகள் விலை மட்டும் நிலையில்லாமல் இருக்கும். ஆனால், தற்போது அனைத்துக் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி குறைந்தால் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விலையைக் கட்டுக்குள் வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் இப்போது அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்ததால் காய்கறிகளுக்குப் பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காய்கறிகளின் விலை ஏற்றம் கண்டுள்ளது.

காய்கறிகளின் விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம் விவசாயிகளுக்கு விலை உயர்வால் நன்மை இல்லை. காய்கறிகளின் விலையை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நேரடியாக விற்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோடை காலத்தில் வெயில், மழைக்கு காய்கறிச் செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் சரியாக பிடிக்கவில்லை. ஆந்திரா, கர்நாடகாவிலும் பரவலாக மழை பெய்ததால் தமிழகத்துக்கு காய்கறி வரத்து குறைந்தது என்று மதுரை மாட்டுத் தாவணி அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் என்.சின்னமாயன் கூறியுள்ளார்.

வழக்கமாக, மதுரைக்கு ஒரு நாளைக்கு 16 லாரிகளில் தக்காளி வரத்து இருக்கும். இப்போது நான்கு லாரிகளில் மட்டுமே தக்காளி வருகிறது. ஒரு லாரியில் 8 டன் தக்காளி வரும். 4 லாரிகளில் தற்போது 32 டன் மட்டுமே தக்காளி வருவதால் அதன் விலை கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது என்று திரு சின்னமாயன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிக நஷ்டம் அடைந்தனர். அப்போது அரசு தரப்பில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட வழங்க முன்வரவில்லை என வருத்தம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்