கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஐவர் உயிரிழப்பு; மூவர்மீது வழக்குப்பதிவு

2 mins read
f089cd05-1cec-4b38-9e64-cbbf18528fb5
இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணி இடம்பெற்றது. - படம்: இந்திய ஊடகம்

கோவை: கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஐவர் மாண்டுபோன சம்பவம் கோவையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. அங்கு மாணவ மாணவியர் தங்கிப் படிக்க ஏதுவாக விடுதி வசதி உள்ளது.

விடுதியைச் சுற்றி மாணவியருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன.

ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த 5 அடி உயரம் கொண்ட சுற்றுச் சுவர் வலுவிழந்து இருந்தது. இதனால், அந்த வலுவிழந்த சுவரை ஒட்டி 5 அடி உயரத்தில் கற்காரையாலான இன்னொரு சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை வழக்கம்போல் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையில், எதிர்பாராத வகையில் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஆறு பேர் சிக்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இடிபாடுகளில் சிக்கிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மாண்டுபோயினர்.

படுகாயமுற்ற நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பருண் கோஸ் என்பவரும் உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து, கட்டுமான நிறுவன உரிமையாளர் கட்டுமானப் பொறியாளர், கட்டுமான மேற்பார்வையாளர் என மூவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனிடையே, விபத்து தொடர்பில் கல்லூரி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியதாக கோவை மாநகர மேயர் கல்பனா குற்றம் சாட்டியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்
தமிழ்நாடுகட்டுமானம்விபத்து