சென்னை: சென்னை மாநகரின் முக்கியச் சாலைச் சந்திப்புகளில் பாடல்கள் ஒலிக்கப்படுவதை நிறுத்துமாறு காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாலைச் சந்திப்புகளில் போக்குவரத்து சமிக்ஞை விளக்கிற்காகக் காத்திருக்கும் நேரத்தில் வாகனமோட்டிகளுக்கு மனமகிழ்வை ஏற்படுத்தும் வகையில் திரைப்பாடல்கள் ஒலிக்கப்பட்டு வந்தன.
குறிப்பாக இளையராஜாவின் பாடல்களும் சில இடங்களில் கரவோக்கே இசையும் ஒலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் பரபரப்பை மறந்து பாட்டை ரசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். சென்னையில் அமலில் இருந்த இந்த முறை வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் செயல்பட்டு வந்தது. காவல்துறையின் இந்த செயல்பாட்டுக்கு பாராட்டுகள் குவிந்தன.
அதேசமயம் சாலை விதிகளைப் பின்பற்றுதல், தலைக்கவச அவசியம் குறித்த விழிப்புணர்வு போன்ற வாசகங்களும் இசையின் நடுவே ஒலித்து வந்தது. அதேசமயம், காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஏற்கெனவே காற்று மாசு, வாகன இரைச்சலால் அவதிப்பட்டு வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்தப் பாடல் ஒலிக்கும் முறை இன்னும் கொடுமையாக இருக்கும் என சிலர் கருத்து தெரிவித்தனர்.
மேலும், சில இடங்களில் காவல்துறையினரை அணுகி பாடல்களின் சத்தத்தைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சில நாள்களுக்குமுன் சென்னை மாநகரக் காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் பதவியேற்றார். அதுமுதல் அவர் பல அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், காவலர்கள் பணி நேரத்தின்போது கைப்பேசி பயன்படுத்தக் கூடாது. இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் முக்கியச் சாலைச் சந்திப்புகளில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்களை நிறுத்த அவர் உத்தரவிட்டுள்ளார். ஒலி மாசுபாடு ஏற்படுவதால் பாடல்களை ஒலிக்கவிட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து சமிக்ஞையில் ஒலிக்கப்பட்டு வந்த பாடல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


