சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கிய காரணத்தால் அவ்வழக்கில் மூன்றாவது நீதிபதியாக திரு சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக 2018ஆம் ஆண்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் வழக்குத் தொடர்ந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது என்றும் இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின்கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் இரண்டு மாதங்களில் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.