முழு செயல்பாட்டுக்கு வந்தது ஒருங்கிணைந்த முனையம்

முழு செயல்பாட்டுக்கு வந்தது ஒருங்கிணைந்த முனையம்

2 mins read
49e6f251-1841-4150-9b7a-4cd919e52602
சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம். - படம்: ஊடகம்

சென்னை: பல்வேறு விமான நிறுவனங்கள் சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தில் இருந்து அனைத்துலக விமானச் சேவையைத் தொடங்கி உள்ளதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சில நாள்களுக்கு முன்பு வரை சென்னை விமான நிலையத்தின் டி3, டி4 ஆகிய இரு முனையங்களின் வழி அனைத்துலக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

13 விமான நிறுவனங்கள் இவ்வாறு விமானங்களை இயக்கி வந்த நிலையில், அந்த விமானச் சேவைகள் அனைத்தும் தற்போது புதிய ஒருங்கிணைந்த விமான முனையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

மொத்தம் 136,295 சதுர மீட்டர் பரப்பளவில், கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தில் ‘ஸ்கைலைட்’ உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதமே புதிய ஒருங்கிணைந்த முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். எனினும், சோதனை ஓட்டங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடவடிக்கை களால் புதிய முனையம் முழுவீச்சில் செயல்படுவது தாமதமானது.

இந்நிலையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ உள்ளிட்ட 13 விமான நிறுவனங்கள் புதிய முனையத்தில் இருந்து தங்களது அனைத்துலக விமான சேவையைத் தொடங்கியுள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தாய் ஏர்வேஸ், மியன்மார் ஏர்வேஸ், ஏர் ஏஷியா பெர்ஹாட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் அனைத்துலக விமானங்களை இயக்கத் தொடங்கி உள்ளதாகவும் இதன் மூலம் புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் செயல்பாடுகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கோலாலம்பூர்- சென்னை, மேடான்-சென்னை நகரங்களுக்கு இடையேயான அனைத்துலக விமானச் சேவைகளும் புதிய முனையத்தின் மூலம் இயக்கப்பட உள்ளதாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்