வேலூர்: பொதுமக்களிடம் ரூ.6,000 கோடி வசூலித்து மோசடி செய்த ஐ.எஃப்.எஸ் நிறுவன இயக்குநர்களின் உறவினர்களது வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதந்தோறும் 8,000 ரூபாய் வட்டித் தொகை அளிக்கப்படும் என இந்நிறுவனம் வெளியிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்து ஏமாந்து போயினர்.
இந்நிறுவனத்தைச் சேர்ந்த முக்கியமான அதிகாரிகள் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவன அதிகாரிகளின் உறவினர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, பணப் பரிவர்த்தனை தொடர்பாக சில ஆவணங்களைக் கைப்பற்றிய அமலாக்கத் துறையினர் உறவினர்களிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது.
மேலும், இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 6 முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரொக்கப் பணம், கார்கள், அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.