காஞ்சிபுரம்: புதிய விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
விமான நிலையம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சென்னை ஐஐடி கல்வி மையத்தைச் சேர்ந்த குழுவினர் வியாழக்கிழமை பரந்தூருக்கு வருகை தந்தனர். இதையறிந்த பரந்தூர், ஏகனாபுரம் கிராம மக்கள் ஆய்வுக் குழுவினர் தங்கள் பணியை தொடங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐஐடி ஆய்வுக்குழு அங்கிருந்து செல்லும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் 4,750 ஏக்கர் பரப்பில் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக பரந்தூரில் 13 கிராமங்களில் நில கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூர் பகுதி மக்கள் கடந்த 346 நாள்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் தங்களுடைய எதிர்ப்பையும் மீறி ஆய்வு மேற்கொள்வதை அறிந்த கிராம மக்கள், ஆய்வு நடக்கும் இடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
மதுரமங்கலம் கிராமத்தில் காவல்துறை தடுப்பரண்களை அமைத்து அனைவரையும் தடுத்ததால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
முந்நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்களை காவல்துறை கைது செய்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, 220 பேர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது.