சென்னை: இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுவதும் சுமார் ஒரு கோடி பெண்களுக்கு இத்தொகை வழங்கப்பட உள்ளது என்றும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின் மூலம் பயனடைய உள்ளவர்களைத் தேர்வு செய்வதற்கு என சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது.
பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் பெறுவதற்காக இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தப் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரே இடத்தில் வைத்து பயனாளிகளிடம் இருந்து விவரங்களைச் சேகரிப்பது கடினமான பணி என்பதால் மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
“இதனால் பொதுமக்களுக்கு விவரங்களை அளிப்பது எளிதாகிவிடும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இல்லத்தரசிகளின் வசதிக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளையும் உள்ளாட்சி அமைப்புகள் செய்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது,” என அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும். நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் மகளிா், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோா், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் உள்ளிட்டோருக்கு உதவித் தொகை அளிக்கப்படும்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.