கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

1 mins read
b2d23dee-9f88-4686-a383-b5d591709f55
அமைச்சர் அன்பில் மகேஷ். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் உதவியோடு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இத்தகவலை அறிக்கை வழி தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

புதிய திட்டத்தின் வாயிலாக கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் முதல்கட்டமாக 13 பள்ளிகளைச் சேர்ந்த 3,800 மாணவர்கள் பயனடைவர் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

“மாணவர்களின் கண்டுபிடிப்புத் திறனை அதிகரிக்க, 710 கருத்தாளர்களின் உதவியுடன் செயல்முறைப் பயிற்சிகள் உள்ளிட்டவை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

“அந்தவகையில், கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோட்டிக், செயற்கை நுண்ணறிவு போன்ற நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த புரிதல்களை ஏற்படுத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது.

“இதற்காக ‘டீல்ஸ்’ என்ற திட்டத்தை செயல்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது,” என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இந்நிலையில், ‘டீல்ஸ்’ திட்ட ஒப்பந்தம் தமிழகத்துக்கு கிடைத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை, உலகத் தரத்துக்கு உயர்த்துவதே திமுக அரசின் இலக்கு என்றும் அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் முதல்வர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
ஒப்பந்தம்