சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மண்ணும் செழித்துள்ளது, மக்களும் செழித்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி, கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர், வேளான்துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் உயிரோடும் தொடர்புடையது என்றார்.
வேளாண் துறைதான் ஒருநாட்டின் செழிப்பை அறிவதற்கான அளவுகோல் என்றும் திமுக ஆட்சியில் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து தனி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்படுகிறது என்றும் முதல்வர் கூறினார்.
வேளாண்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வேளாண் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.
“புதிதாக பத்து உழவர் சந்தைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திமுக அரசு வேளாண் புரட்சிக்காக பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
“வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மத்திய பாஜக அரசு எப்போதுமே உழவர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருவதாகச் சாடிய அவர், மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து உழவர்களைப் போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசுதான் என்றார்.

