சிறப்புச் சலுகை அறிவித்த பிரியாணி கடையை மூட உத்தரவு

1 mins read
baabdad4-0239-402e-95d2-c901581a2e8f
உணவகத்துக்கு வந்தவர்களை அவதிக்கு ஆளானதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், பொதுமக்களை கலைந்து செல்லும்படியும் கடைக்கு சீல் வைக்கும்படியும் உத்தரவிட்டார். - படம்: தமிழக ஊடகம்

வேலூர்: திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகையை அறிவித்த பிரியாணி கடையை முதல் நாளிலேயே மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் தமிழகத்தின் வேலூர் மாவட்டம், காட்பாடியில் நிகழ்ந்தது.

ஒரு இறைச்சி பிரியாணி வாங்கினால் ஒரு கோழி பிரியாணி இலவசம் என அறிவிப்பை அந்த உணவகம் வெளியிட்டிருந்தது.

இதனையடுத்து மதியம் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாத 300க்கும் மேற்பட்டோர் வேலூர் செல்லும் சாலையில் நீண்ட வரிசையில் குடை பிடித்த நிலையிலும் கையால் முகத்தை மறைத்தவாறும் நீண்டநேரம் காத்திருந்தனர். இதனால் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அவ்வழியாக சென்றுகொண்டிருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், காரிலிருந்து இறங்கி அந்த உணவகத்தில் ஆய்வு செய்தார்.

உணவகத்துக்கு வந்தவர்கள் வெயிலில் அவதி படாதவாறு குடைகளோ இருக்கை வசதியோ செய்து தராமல் அவர்களை அவதிக்குள்ளாக்கியதாகக் கூறிய திரு பாண்டியன், பொதுமக்களைக் கலைந்து செல்லும்படியும் கடைக்கு சீல் வைக்கும்படியும் உத்தரவிட்டார்.

இதனால் பிரியாணி வாங்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மாநகராட்சியிடம் இருந்து தொழில் உரிமம் சான்றிதழைப் பெறாமல் அந்த உணவகம் செயல்பட்டு வந்தது மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்தது.

தொழில் உரிமச் சான்றிதழ் பெறாததால் உணவக உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்