சென்னை: டாஸ்மாக் நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. மக்கள் மது குடிப்பதை நிறுத்துவதன் மூலம் டாஸ்மாக் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
அமைச்சர் முத்துசாமி தலைமையில் திங்கட்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“டாஸ்மாக் மூலம் வருமானத்தை ஈட்டுவது இலக்கு இல்லை. 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருமானத்தை அதிகரிப்பது நோக்கமல்ல, தவறான பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பதுதான் நோக்கம். குடிப்பதை நிறுத்தி, அதனால் வருமானம் குறைந்தால் பிரச்சினை இல்லை,” என்று அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளைக் கண்டறிந்து அவற்றை 22.6.2023 அன்று முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் செயல்பட்டு வந்த சட்ட விரோத பார்களும் மூடப்பட்டன.
இதன் காரணமாக, டாஸ்மாக்கில் அன்றாட வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளது. வழக்கமாக தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அன்றாடம் ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால், தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடிதான் அன்றாட விற்பனை உள்ளதாகக் கூறப்படுகிறது.
“பணியாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதுதான் எங்களின் முதல் நடவடிக்கை. டாஸ்மாக் கடைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் பணத்தை, வங்கி அதிகாரிகள் நேரடியாக வந்து வாங்கிக்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
“உரிமம் உள்ளவர்கள் மட்டும்தான் பார் நடத்த முடியும். உரிமம் பெற்றவர்கள் விதிகளை பின்பற்றித்தான் நடத்த வேண்டும். அதிகாரிகள் இதைக் கண்காணித்து வருகிறார்கள். உரிமம் இல்லாமல் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அமைச்சர் முத்துசாமி.
“காலையில் வேலைக்கு செல்பவர்கள் மதுபானம் கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறுகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. டெட்ரா பேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் பாட்டில் பயன்பாட்டை குறைக்க முடியும். கண்ணாடி பாட்டில் மது பலருக்கு பிரச்சினையாக உள்ளதால் டெட்ரா பேக்கில் மது கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“டாஸ்மாக் கடைக்கான நேரத்தை மாற்றியமைப்பது குறித்து முடிவு செய்யவில்லை. டாஸ்மாக் கடைகளில் கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

