தமிழகத்தில் புதிதாக 1,021 மருத்துவர்கள்

2 mins read
39b22957-6d9b-46c2-b3a1-59402f58b6f9
அமைச்சர் மா.சுப்பிரமணியன் - படம்: தமிழக ஊடகம்

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.75 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஹீமோபிலியா மற்றும் ஹீமோகுளோபினோபதி பராமரிப்பு மைய கட்டடம், ரூ.20 கோடி மதிப்பிலான 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் ஆகியவை கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு துவக்கி வைத்துப் பேசினார்.

மலைவாழ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த தருமபுரி மாவட்டத்தில், தமிழகத்திலேயே முதன் முறையாக இந்த பராமரிப்பு மைய கட்டடம் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மாவட்டம்தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற சிறப்பான திட்டத்தை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் இன்று இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் 1,021 மருத்துவப் பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 85 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பணி இன்னும் 20 நாட்களில் முடிவுறும். ஒரு ரூபாய் கூட கையூட்டு இல்லாமலும், இடைத்தரகர்கள் தொந்தரவு இல்லாமலும், நேரடியாக பணி அமர்த்தப்பட உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிட மாறுதல் வெளிப்படையாக நடைபெற்று வருகிறது என்று அவர் கூறினார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் இளநிலை மருத்துவம் படித்தவர்கள் மட்டும்தான் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அரசு அறிவித்ததாக தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லை. பிற மாநிலங்களில் இளநிலை மருத்துவம் படித்த தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்