மயிலாடுதுறை: மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள அம்பி மெஸ் சைவ உணவகத்தில், போண்டாவில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததைப் பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த செல்வம், கர்ப்பிணியான தனது மகள் செல்வலட்சுமியுடன் மருத்துவமனைக்குச் சென்றார் . அப்போது, அந்தக் கடைக்கு மகளுடன் உணவருந்தச் சென்றார். அங்கே செல்வலட்சுமி பொங்கல், போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். போண்டாவை சாப்பிட்டபோது அதில் பல்லி ஒன்று வெந்து கருகி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கடை நிர்வாகத்தினரிடம் கூறவே, கடை நிர்வாகத்தினர் கறிவேப்பிலை கிடக்கும் என்று இலையில் இருந்த வடையை பிடுங்கி தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. வாசலில் டீ குடித்துக் கொண்டிருந்த தந்தை செல்வம் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு கர்ப்பிணி பெண் நலமுடன் வீடு திரும்பினார்.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையம் மற்றும் நகராட்சி உணவு பாதுகாப்புத் துறையினரிடம் செல்வம் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பெயரில் மயிலாடுதுறை நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் விளக்கம் கேட்டு பதில் அளிக்க உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் உயர்தர சைவ உணவகத்தில் கரப்பான் பூச்சி கிடந்தது.