விழுப்புரம்: நீதிமன்ற உத்தரவுப்படி விழுப்புரம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வந்த வள்ளலார் மடத்தின் பூட்டினை உடைத்து இந்து சமய அறநிலையத்துறையினர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர்.
விழுப்புரம் ரயில் நிலையம் அருகே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அறக்கட்டளை சார்பில் வள்ளலார் அருள் மாளிகை இயங்கி வருகிறது.
இந்த அறக்கட்டளையில் முறைகேடு நடைபெறுவதாக சீனுவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016ல் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
அந்த உத்தரவின் பேரில் விழுப்புரம் மண்டலம் இணை ஆணையர் சிவக்குமார் விசாரணை செய்ததில் கணக்கு வழக்குகள் சரியாக பின்பற்றாமல் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை எதிர்த்து அதை நடத்தி வந்த அண்ணாமலை என்பவர் முறையீடு செய்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் மூலம் தக்காரை நியமித்து நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தொடர்ந்து, அண்ணாமலைக்கு விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி வள்ளலார் அருள் மாளிகையை கையகப்படுத்துவதற்காக உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் வள்ளலார் அருள் மாளிகைக்குச் சென்றனர். அந்த மாளிகை பூட்டப்பட்டிருந்ததால், அதை உடைத்து, உள்ளே நுழைந்து கையகப்படுத்தினர்.

